×

பிள்ளையாரின் அறுபடை வீடுகள்

சங்கடஹர சதுர்த்தி 10-1-2023

முருகப் பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதை எல்லோரும் அறிவோம். அதேபோல பிள்ளையாருக்கும் அறுபடை வீடுகள் உண்டு. அவை என்னென்னவென்று காண்போமா?  

1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்

ஊரின் பெயரே இறைவனின் திருப்பெயரால் அழைக்கப்படும் பெருந்தலம் இது. ராஜகோபுரங்களோடு கூடிய பொலிவு மிக்க தலமாக விளங்குகிறது. வரலாற்றுப் பெருமையும், புராணத் தொன்மையும் சுமந்து நிற்கும் பூமி இது. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த கோயில் இது. திருவீங்கைக்குடி மாகாதேவர் எனும் திருவீசர் ஈசனாக அருளும் மகத்தான ஆலயமாகவும் இது விளங்குகிறது. இந்த ஆலயத்தில் குடைவரை அமைப்பிற்குள் கற்பக விநாயகர் அருட்காட்சி தருகிறார்.

பிள்ளையாருக்கென அமைத்த இந்த தலத்தை பின்னாட்களில் பாண்டிய அரசர்களும் தங்களை திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டார்கள்.
பிள்ளையார்பட்டியில் அருளும் பிள்ளையார் வலம்புரியாக இருப்பதால் மிகுந்த தத்துவம் பொதிந்த மூர்த்தமாக கருதப்படுகிறது. வலப்புற தந்தம் ஒடிந்ததான அமைதியில் காட்டப்பெறுவதன் மூலம் `ஓ’ என்ற எழுத்தின் தொடக்கச் சுழி கிடைத்து விடுகிறது. கையிலுள்ள மோதகம்தான் ‘ம்’ என்ற வரிவடிவத்தை உணர்த்துகிறது.

இவ்வாறு வலம்புரி பிள்ளையாராகவே இந்த தலத்தில் அருள்வதால் மற்ற மூர்த்தங்களைவிட சிறப்பு பெற்றதாக விளங்குவதை காணலாம். சாதாரணமாக மற்ற தலங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களோடு விநாயகர் அருள்கிறார். இந்த கற்பக விநாயகரை தரிசிக்க வாழ்வு வளம் பெறும். காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.

2. விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில். விருத்தாம்பிகை - பாலாம்பிகை சமேதராக அருள் பரப்பி வருகிறார் விருத்தகிரீஸ்வரர். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலம் இது விளங்குகிறது. விருத்த காசி, பழமலை, திருமுதுகுன்றம் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. நுழைவாயிலைக் கடந்து, உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்து பிள்ளையார் கிழக்கு முகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். ஆழ் அகத்துப் பிள்ளையாரைத்தான் ஆழத்துப் பிள்ளையார் என்கிறார்கள்.

இங்கு 16 படிகள் உள்ளன. இந்த பதினாறு படிகளும் பிள்ளையாரின் முக்கியமான பதினாறு திருப்பெயர்களை சொல்வதாக உள்ளது. இதைத்தான் ஷோடச நாமாக்கள் என்பார்கள். ஷோடச என்றால் பதினாறு என்று பொருள். அந்த பெயர்கள் என்னவென்று பார்ப்போமா? ஸூமுகர், ஏகதந்தர், கபிலர், கஜகர்ணர், லம்போதரர், விகடர், விக்நராஜர், விநாயகர், தூமகேது, கணாத்யக்ஷர், பாலசந்திரர், கஜானனர், வக்ரதுண்டர், சூர்ப்பகர்ணர், ஹேரம்பர், ஸ்கந்தபூர்வஜர் என்கிற பதினாறு திருப்பெயர்களை நினைவூட்டுவதாகவே இந்தப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன.

3. திருநாரையூர்

திருநாரையூர் தலம் அரிதும், பெருஞ் சிறப்பும் வாய்ந்த தலமாகும். தமிழின் பொற்கிடங்கான தேவாரம் முதலான பதிகங்களை காட்டியருளிய அற்புதத்தை நிகழ்த்திய தலமாகும். தொடக்கத்திலிருந்தே ராஜராஜ சோழனுக்கு, ஏன் இப்படி சில பதிகங்கள் மட்டும்தான் கிடைத்துள்ளன. மற்ற பதிகங்கள் எங்கேயிருக்கின்றன என்கிற குறை இருந்து கொண்டேயிருந்தது. அப்போதுதான், திருநரையூர் எனும் தலத்தில் நம்பியாண்டார் நம்பி என்பார் அத்தலத்திலுள்ள ``பொல்லாப் பிள்ளையாரின்’’ அருள் பெற்றிருப்பதை அறிந்தார். உடனேயே அத்தலத்தை நோக்கிச் சென்றார்.

ஆதியில் மகாபாரதம் எழுதிய விநாயகப் பெருமான்தான் இப்போதும் தேவாரம் உள்ளிட்ட திருபதிகங்களை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று வேண்டினார்.
நம்பியாண்டார் நம்பியை வணங்கிய பேரரசன் கைகூப்பியபடியே, ‘‘தாங்கள் ஆதிநாயகனோடு அளவளாவுவதாக நம்புகிறோம். தாங்கள்தான் பெருமானிடம் பதிகங்கள் எங்குள்ளன’’ என்பதை கேட்டுச் சொல்ல வேண்டும் என்றான். பொல்லாப் பிள்ளையாரிடம் அதீத நம்பிக்கையோடு இருந்த நம்பியாண்டார் பெருமானின் கருணைப் பாதம் பற்றி ‘‘எங்கேயிருக்கிறது பதிகங்கள்’’ என்று கேட்டார்.

ஆதித்தலமான சிதம்பரத்தில் மேற்குப் பிராகாரத்தில் ஓர் அறையில் ஏடுகளாக உள்ளன என்று பிள்ளையார் தெரிவிக்க, அதை மன்னரிடம் நம்பியாண்டார் கூற எல்லோரும் சிதம்பரம் நோக்கி விரைந்தனர். தில்லை மூவாயிரவர்களிடம் இதைத் தெரிவிக்க அவர்கள் மறுத்தனர். ‘‘தேவாரம் படைத்த மூவர் வந்தால் திறப்போம்’’ என்றனர். ராஜராஜன் சிலா விக்ரகங்களாக மூவரையும் நிறுத்த, பின்னர் திறந்தனர். ஏடுகளை கரையான் புற்று கரைத்திருந்தது. வேண்டியதை மட்டுமே விட்டுவைத்து மீதியை மண்மூடச் செய்ததாக அசரீரியின் மூலமாக ஈசனே அப்போது அறிவித்தார்.

அதற்குப் பிறகு ஏடுகளை பத்திரமாக பிரித்து பாடம் செய்து பதிகங்களாக தொகுத்து அளித்தார், நம்பியாண்டார் நம்பி. அவருக்குப் பின்னால் இருந்து எல்லாவற்றையும் செய்து பதிகங்களை கொணர்ந்ததே கஜமுகனான பொல்லாப் பிள்ளையார்தான் என்பதை சொல்லத்தான் வேண்டுமா என்ன? திருப்பதிகங்களை அளித்த வேழ முகத்தோனை மறவாது தொழுங்கள். இத்தலம் சிதம்பரத்திற்கு அருகேயே உள்ளது.

4. திருக்கடையூர்

சிறந்த சிவபக்தனான மார்க்கண்டேயனை எமன் பாசக்கயிறால் சுருக்கிட்டார். என் பக்தனையா பிடித்திழுத்தாய் என்று ஈசன் கொதித்தெழுந்தார். எமனான காலனையே சம்ஹாரம் செய்து காலசம்ஹாரமூர்த்தியாக இத்தலத்தில் அருட்கோலம் காட்டினார். எமனால் தீண்ட முடியாத தலமாக இது மாறியது. மேலும் ஈசனின் திருப்பெயரே அமிர்தகடேஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருப்பெயரோ அபிராமியன்னை.
 
ஒருமுறை தேவர்கள் விநாயகப் பெருமானை துதியாது மறந்தனர். கொழுக்கட்டைக்குள் பூர்ணமான அமுதத்தை ஏந்தி நிற்கும் விநாயகரை மறந்துபோய் அதெப்படி அமுதத்தை பெற முடியும். அமுதம் வேண்டும் என்கிறபோதே அதை கையில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமானும் நினைவுக்குள் வர வேண்டுமல்லவா. முற்றிலும் மறந்தார்கள். அதனால் ஆதிநாயகன் அமுதத்தை மறைத்தான். அதுவும் அமுத லிங்கமாக தன் தந்தை உறையும் அமிர்தகடேஸ்வரன் ஆட்சி செய்யும் தலத்திலேயே தன் லீலையை நிகழ்த்தினான்.

மெதுவாக அமுத கலசத்தை எடுத்து வைத்துக் கொண்டான். தேவர்கள் தொடர்ந்து தேடினார்கள். ஈரேழு லோகங்களுக்கும் சென்று அலைந்தார்கள். யாரை முதலில் தொழவேண்டுமோ அவரைத் தொழ மறந்தோமே என்று இறுதியொதான் ஞானம் உதித்தது. விநாயகரின் பாதம் பணிந்தார்கள். ஆதிநாயகன் அமுதக் கும்பத்தை கொடுத்தான். தேவர்கள், இனி உம்மை மறக்காது துதிப்போம் என்றனர். இவ்வாறு விகடமாக பிள்ளையார் லீலை செய்த தலமே திருக்கடையூர் ஆகும். மயிலாடுதுறையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் எனும் இத்தலம் உள்ளது. பொதுவாகவே இங்கு அறுபதாம் கல்யாணம் என்கிற சஷ்டி அப்த பூர்த்தி திருமணத்தை நடத்துவர்.

5. திருச்சி உச்சிப் பிள்ளையார்

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேகம் நிறைவுற்றது. விபீஷணன் உள்ளமும், கண்களும் குளிரக்குளிர ஸ்ரீராமரையும் சீதாப் பிராட்டியாரையும் தரிசித்தான். புறப்பட வேண்டுமே என்று கொஞ்சம் வருத்தமுற்றான். ராமரும் பிரிய மனமிலாது விடையளித்தார். ராமர், தன்னுடைய நினைவுப் பரிசாக தன் குலப்பதியான ஸ்ரீரங்கநாதரை அளித்தார். விபீஷணன், மகிழ்ந்து ஏற்று அயோத்தியிலிருந்து புறப்பட்டு திரிசிரபுரம் எனும் இன்றைய திருச்சிக்கு வந்தான். சற்று ஒய்வெடுக்க தீர்மானித்தான்.

காவிரிக்கு அருகேயே அங்கு சிறுவனாக வந்திருந்த விநாயகரிடம், ரங்கநாதரின் சிலையை கொடுத்துவிட்டு சென்றான். இத்தலத்தில்தான் இந்த ரங்கநாதர் பிரதிஷ்டையாக வேண்டுமென்று யார் தீர்மானித்தார்களோ இல்லையோ, ஞானமுதல்வன் தீர்மானித்து விட்டான்.  விபீஷணன் கைகளில் கொடுத்த ரங்கநாதரை அங்கேயே வைத்தார். மறைந்தார். அருகேயுள்ள மலையின் உச்சியில் சென்று அமர்ந்து கொண்டார். விபீஷணன் திரும்ப வந்தான், சிறுவனை காணவில்லையே என்று அதிர்ந்தான். அருகேயே ரங்கநாதர் பிரதிஷ்டை ஆகியிருப்பது பார்த்து திகைத்தான்.

ரங்கநாதரை எடுத்துச் செல்லலாம் என்று எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை. இது அந்த ஆதிநாயகனின் லீலைதான் போலும் என்றுணர்ந்து ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்தார். சிலையை கொடுத்து விட்டுச்சென்ற சிறுவன் மலையின் மீதுள்ளதை அறிந்த விபீஷணன் அங்கு சென்று பார்த்தான். ஏன் அப்படி கீழே வைத்தாய் என்று கோபம் காட்டி குட்டு வைத்ததாகவும் கூறுவர். உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு உள்ளதாக சொல்வார்கள்.

6. திருவண்ணாமலை

திருவண்ணாமலை கோயிலில் அருளும், செல்வக் கணபதி, சிவகங்கை விநாயகர், ஆனைத் திரை கொண்ட விநாயகர், செந்தூர விநாயகர் எனும் சம்மந்த விநாயகர், க்ஷேத்ர விநாயகர் என்று ஐந்து முக்கிய விநாயகர் சந்நதிகள் உள்ளன. இதில் அறுபடை வீடாக எதைக் கொள்ளலாம் எனும் ஐயம் உள்ளது. ஆனாலும், ஔவையார் இத்தலத்திலுள்ள ஓர் விநாயகர் மீது ஆதாரப்பூர்வமாக பாடலை இயற்றியிருக்கிறார்.

அல்லல் போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத்
துயரம்போம் நல்ல
குணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும்
செல்வக் கணபதியைக்
கைதொழுதக் கால்


எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை, தீமை போன்றவற்றால் விளையும் வினைகளும் போகும். பிறவி எடுக்கக் காரணமாக உள்ள இனி அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் இருக்காது. அது எப்படியெனில் இந்தத் திருவண்ணாமலை எனும் அருணை கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக் கணபதியை தொழுது கும்பிட்டால் போதும். உங்களின் சகல வினைகளும் தீர்ந்துபோகும்.

ஞானம் கைமேல் கனியாக வரும் என்று கூறுகிறார். இப்படியாக அருணை கோபுரத்துள் என்று சொல்லும்போது கோயிலின் முக்கிய வாயிலான கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே அருளும் செல்வக் கணபதியைத்தான் ஔவைப்பாட்டி கூறுவது பொருந்தி வருகிறது.

Tags : Arupada ,Pillaiyar ,
× RELATED ஓம் சரவணபவ: முருகனின் 16 வகை...